ஆசிரிய நண்பர்களுக்கு சிறு வேண்டுகோள்...
ஆண்டுவிழாக்களில் முழு முயற்சியாக திரைப் பட பாடல்களுக்கு மாணவர்கள் நடனம் ஆடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டுகிறேன். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வருவது போன்ற கேலி மற்றும் ஒன்றுக்கும் உதவாத கைதட்டலுக்கான நாடகங்களும் தவிர்க்க வேண்டும்.
இறுதி முயற்சியாக நமது கையிலுள்ள தொடக்கப்பள்ளி மாணவர்களை நாம் சிறந்த முறையில் வடிவமைப்பதன் மூலமாகவே எதிர்கால சமுதாயத்தை சிறப்பாக கட்டமைக்க முடியும்.
நாகரிகம், புதுமை என தறிகெட்டு திரியும் இக் காலத்தில் சமூக அக்கறை, மனிதாபிமானம் முதலியவற்றை பேண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதை அனைவரும் அறிவர்.
எத்தனை ஜென்மங்களுக்கும் நீங்காத துன்பமாக (சில கருத்து செறிவு மிக்க படங்கள் தவிர) விளங்கும் திரைப்படங்களில் வரும் ஒரு சில நல்ல விஷயங்களை காட்டிலும், தீய நிகழ்வுகளை பெரிதும் செய்து பார்க்க, தங்களையும் கதாபாத்திரமாக கருதும் மனப்பான்மையை மாற்ற, சிறு வயது முதலே பக்குவப்படுத்துதல் அவசியமாக கருதுகிறேன்.
2015 ஆம் ஆண்டு எம் பள்ளியில், மண்எண்ணெய்க்கு பதிலாக
குடிநீரை ரேஷன் கடையில் வாங்குவது, குடிநீர் திருடு போனதிற்கு காவல் நிலையத்தில் புகார் அளிப்பது மற்றும் மரங்களை வெட்டியதால் மழை பொய்த்தது போன்ற சமூக விழிப்புணர்வு நாடகங்களை நிகழ்த்தினேன்.
அன்னக்கிளி படத்தில் இடம் பெற்ற " அடி ராக்காயி மூக்காயி நெல்லு குத்த வாங்கடியோ" போன்ற அரத பழைய " அர்த்தமுள்ள" பாடல்களுக்கு நடனம் ஆட அனுமதித்தேன்.
சிந்தனையோடு கூடிய சிரிப்பு நாடகம், தாய்ப் பாசத்தை வெளிப்படுத்தும் வகையிலான பாடல்கள் நாடகம், தேச பக்தியை வெளிப்படுத்தும் பாடல்கள் நாடகங்களையே முற்றிலும் இடம்பெறச் செய்ய வேண்டும்.
முன்னதாக, நம்மில் பலரும் இவ்வாறே செய்து வந்தாலும் அதனையே சலிப்பின்றி தொடர்ந்து செயல்படுத்த வேண்டுமாய்...
தீயவைகளை மிக எளிதில் சமுதாயத்திலும், சினிமாக்களிலும் கற்றுக் கொள்ளும் வருங்கால சமுதாயத்தை, மனதில் ஈரமுள்ளவர்களாக, பண்பாளர்களாக மாற்ற நம்மால் மட்டுமே முடியும் என்ற மாபெரும் நம்பிக்கையில்
சிரம் தாழ்ந்த வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ரகுபதி இநிஆ
திம்மசந்திரம்
கிருஷ்ணகிரி


